தந்தை பெரியார்
ஒரு முறை விருது நகரில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்தின் முன்னால் அமர்ந்திருந்த ஒருவன் திடீரென்று கத்தியோடு பெரியாரை நோக்கிப் பாய்ந்தான். பெரியார் சிறிதும் படபடப்பு இல்லாமல் அந்த நபரின் கையை எட்டிப் பிடித்தார். அதற்குள் தொண்டர்கள் பெரியாரைத் தாக்க வந்தவனை தாக்க ஆயத்தமாகி விட்டனர். தன்னைத் தாக்க வந்தவனை ஒன்றும் செய்யாதீர்கள் என தனது தொண்டர்களை அமைதிப்படுத்தினார். பின்னர் அந்த நபரை தன் கூடவே மேடையில் உட்கார வைத்துக்கொண்டார். பின்னர் அந்தக் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டம் முடிந்ததும் கத்தியோடு வந்த நபரை தனது வேனில் ஏற்றிக்கொண்டு பெரியார் கிளம்பினார். தொண்டர்கள் அவனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பதற்காக ஏற்றிச் செல்கிறார் என நினைத்தனர். ஆனால், பெரியாரோ அவ்வாறு செய்யாமல் கத்தியோடு வந்தவனின் வீட்டுக்கே கொண்டு போய் இறக்கி விட்டு விட்டுச் சென்று விட்டார். அப்படி தன்னுடன் அவனை வீடு வரை கொண்டு சென்று விடவில்லையென்றால் இயக்கத் தோழர்கள் அவனைத் தாக்கி துன்புறுத்தி விடுவார்கள் என நினைத்தார் அந்தப் பகுத்தறிவுப் பகலவன்.
நெல்சன் மண்டேலா
மறைந்த தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதியும் கறுப்பர் இனத் தலைவருமான நெல்சன் மண்டேலா வழக்கறிஞராக பணி புரிந்த காலத்தில் அவரிடம் வேலை கேட்டு ஒரு வெள்ளைக்காரப் பெண் வந்தாள். மண்டேலா அந்தப் பெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். அவள் மண்டேலாவின் அலுவலகத்தில் டைப்பிஸ்ட் வேலை பார்த்து வந்தாள். மண்டேலா அவளிடம் ஒரு சில விபரங்களை டைப் செய்யும்படி கூறியிருந்தார்.அந்த சமயத்தில் வெள்ளையர் ஒருவர் ஒரு வழக்கு தொடர்பாக மண்டேலாவைச் சந்திக்க வந்தார். அப்போது டைப் அடித்துக் கொண்டிருந்த அந்த வெள்ளைக்காரப் பெண் தன்னுடைய பண பையைத் திறந்து சில டொலர்களை மண்டேலாவிடம் நீட்டி "மண்டேலா கடைக்குப் போய் எனக்கு ஷாம்பூ போத்தல் ஒன்று வாங்கி வாயேன்” என்றாள். அதைக் கேட்டதும் மண்டேலா அதிர்ச்சியால் உறைந்து போனார். அதற்குக் காரணம், தான் ஒரு கறுப்பரிடம் வேலை செய்யவில்லை என்பதை அங்கு வந்த வெள்ளைக்காரர் உணர வேண்டும் என்பதற்க்காவே அந்த பெண் அவ்வாறு செய்தாள்.
ஐன்ஸ்டீன்
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஒரு முறை ரயில் வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சிற்றுண்டி சாப்பிட ஆசைப்பட்டார். உணவு பரிமாறுபவரிடம் இருந்து மெனு கார்டை வாங்கியவர், அதைப் படிக்க தான் பயன்படுத்தும் மூக்குக்கண்ணாடியைத் தேடினார். ஆனால் அது எங்கும் கிடைக்காமல் போக கண்ணாடி இல்லாமலேயே படிக்க முயன்றார். முடியவில்லை . கடைசியில் உணவு பரிமாறுபவரிடமே கொடுத்து, "இந்தா நீயே படி" என்றார் ஐன்ஸ்டீ ன். அதற்கு அவர், "மன்னிக்க வேண்டும். நான்கூட தங்களைப் போல படிக்காதவன்" என்றாரே பார்க்கலாம்.
Tags:
Tamil WriteUps