The Crocodile Hunter Steve Irwin(முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வின்)

அவுஸ்திரேலியாவின் இயற்கை இயல்வாதியும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் புகழ் பெற்றவருமான ஸ்டீவ் இர்வின் மரணமடைந்து ஒரு தசாப்தம் கடந்து விட்டது. இவர் மரணித்த செய்தி வெளியான போது அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலுமுள்ள அவரின் அபிமானிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவருக்கு மரணத்தை ஏற்படுத்தியது ஒரு வகை மீன் என்றால் நம்ப முடிகிறதா..? அவர் எப்படி மரணித்தார் என்பதை இக்கட்டுரையின் மூலம் பார்ப்போம். 'குரோக்கடைல் ஹன்டர் '(Crocodile hunter) நாடி நரம்புகளை முறுக்கேற்றி புல்லரிக்க வைத்துவிடும் நிகழ்ச்சி. கையில் எதுவுமின்றி வன விலங்குகளை எதிர்கொண்டவர் ஸ்டீவ். சுற்றுச்சூழலுக்கும் வனவிலங்குகளின் உயிர்களுக்கும் மதிப்பேயில்லாமல் போன காலகட்டத்தில், அவற்றுக்காகத் தன் உயிரை பணயம் வைத்தவர். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவ் இர்வினின் பெற்றோரும் முதலை வேட்டைக்காரர்கள்தான். இர்வினின் பெற்றோர் குயின்ஸ்லாந்தில் பெரீவா என்ற இடத்தில் வனவிலங்குகள் சரணாலயம் நடத்தி வந்தனர். பெற்றோரிடம் இருந்துதான் அத்தனை விடயங்களையும் இர்வின் கற்றார். 6 வயதில் மலைப்பாம்புகளைக் கையாண்ட இர்வின், 9ஆவது வயது முதல், முதலைகளைப் படித்தார். பன்னிரண்டாவது வயதிலேயே தந்தை பாப் மேற்பார்வையில், முதலையைப் பிடிக்க ஆரம்பித்தார் இர்வின். இர்வினின் மனைவி டெர்ரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர்தான். இர்வின் டெர்ரி எதிர்பாரா சந்திப்பு திருமணத்தில் முடிந்தது. கடந்த 1991ஆம் ஆண்டு , அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா சென்ற டெர்ரி, இர்வினின் வனவிலங்குகள் சரணாலயம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். இர்வினைக் கண்டதும் டெர்ரிக்கு காதல் பற்றிக் கொண்டது. "இர்வினை பார்த்ததுமே எனக்கு டார்ஜான்தான் நினைவுக்கு வந்தார்" என டெர்ரி கூறுவார். காதல் மலர்ந்த நான்கே மாதங்களில் திருமணத்தில் முடிந்தது. காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக இரு குழந்தைகள். மூத்தவள் பிந்தி. 1998ஆம் ஆண்டு பிறந்தாள். இப்போது 19 வயதான பிந்தியும் தந்தையைப் போலவே முதலை சாகசக்காரிதான். கடந்த 2003ஆம் ஆண்டு இளையவன் பொப் ரொபர்ட் பிறந்தான்.இர்வினின் சாகச நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு, 'இப்படியெல்லாம் ஒரு மனிதன் விலங்குகளுடன் பயமற்று உலவ முடியுமா?' என்ற கேள்வி நிச்சயம் எழும். 1990ஆம் ஆண்டு முதல் டிஸ்கவரி உள்ளிட்ட பல் வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான இர்வினின் டாக்குமெண்டரிகள் மிரள வைத்தன. அனகொண்டா, மலைப்பாம்பு எல்லாம் குழந்தை போலத்தான் இர்வினின் கையில் இருக்கும். கடந்த 1996ஆம் ஆண்டு , இர்வினின் 'தி குரோக்கடைல் ஹன்டர்' நிகழ்ச்சி முதன்முறையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியைப் பார்த்து ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இர்வினுக்கு உருவானார்கள். சுமார் 50 கோடி மக்களை 'குரோக் கடைல் ஹன்டர் ' நிகழ்ச்சி சென்று சேர்ந்தது.
The Crocodile Hunter Steve Irwin(முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வின்)

ரொபர்ட் ஒரு மாதக் குழந்தையாக இருந்த போது, அவனை கையில் வைத்துக் கொண்டு, மற்றொரு கையால் முர்ரே என்ற 6 அடி நீள முதலைக்கு ஸ்டீவ் இர்வின் உணவு வழங்கிய நிகழ்ச்சி, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட, மக்கள் பதைபதைத்துப் போனார்கள். இர்வினுக்கு கண்டனங்கள் குவிந்தன. இர்வின் மன்னிப்புக் கேட்ட பின்னரே பிரச்சினையின் தீவிரம் அடங்கியது. இப்போது, ரொபர்ட்டும் தந்தை போலவே முதலை வீரனாகி விட்டான். மீன்குஞ்சுக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழலுக்காகவும் அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களைக் காப்பாற்றவும் இர்வின் உழைத்தார். தான் நேசித்த துறையில் விரும்பிய பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மரணித்து விட்டார் ஸ்டீவ். கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் திகதி, அவுஸ்திரேலிய கடற்பகுதியில் 'ஆபத்தான கடல் விலங்கினங்கள்' பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது, கொட்டும் திருக்கை மீன் (stingray) மார்பில் கொட்டியதில், மரணத்தைத் தழுவினார் இர்வின். 'தி குரோக்கடைல் ஹண்டர்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் உலகின் 122க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 250 மில்லியன் தொலைக்காட்சி ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வந்தவர் ஸ்டீவ் இர்வின். அவுஸ்திரேலியாவின் வடமாநிலமான குயின்ஸ்லாந்து கடற்கரைக்கு அப்பால் போர்ட் டக்லஸ் துறைமுக நகரிலிருந்து சுமார் ஒன்பது மைலுக்கு அப்பால் கிரேட் பேரியர் ரிப் பகுதியில் நிகழ்ந்த ஸ்டிங்ரே ரக மீன் ஒன்றின் தாக்குதலால் மரணமடைந்தார். கடல் உயிர் வாழ்வனவற்றுள் மிகவும் அபாயகரமான பிராணிகள் (The Ocean's Deadlies) என்ற தலைப்பிலான தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சி தயாரிப்பில் அவர் அப்போது ஈடுபட்டிருந்தார். மணலில் மறைந்திருந்த ஸ்டிங்ரே வகை மீன் ஒன்றின் அருகே ஸ்டீவ் இர்வின் நெருங்கிச் சென்ற போது திடீரென மேலே கிளம்பிய அந்த மீன் தன் வாலிலுள்ள ஈட்டி போன்ற பகுதியை ஸ்டீவ் இர்வின் மீது மோதியபோது அவருடைய இருதயத்தில் துளை விழுந்தது. அந்த ஈட்டி போன்ற பகுதியை அவர் தன் உட லிலிருந்து பிய்த்தெடுத்த போது மயங்கிப் போனார். உடனிருந்தோர் அவரை நீரின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டு வந்து இறப்பர் மிதவைப் படகின் மூலம் தங்கள் கப்பலுக்குக் கொண்டு சென்றனர். கப்பலிலிருந்து அவசர ஹெலிகொப்டர் மூலம் குயின்ஸ்லாந்து, கேயின் நகர மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.

அவுஸ்திரேலிய மிருகக்காட்சிச் சாலையின் இயக்குநராகவும் அதன் உரிமையாளராகவும் அவர் இருந்தார். ஸ்டீவ் இர்வினுக்கு எல்லா வகையிலும் துணையாக இருந்து அவரின் புகழுக்கு முக்கிய காரணமாக விளங்கிய அவருடைய மனைவி டெர்ரி இர்வின் விபத்து நடந்த போது அவருடன் இருக்கவில்லை . 


பிறப்பு

The Crocodile Hunter Steve Irwin(முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வின்)
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் போப் மற்றும் லீன் இர்வின் தம்பதியருக்கு 1970ஆம் ஆண்டில் ஸ்டீவ் இர்வின் பிறந்தார். சிறு குழந்தையாக இருக்கும் போதே அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மாநிலமான குயின்ஸ்லாந்தின் பீயர்வா கடற்கரையை ஒட் டிய நகரில் அவருடைய தந்தை உருவாக்கிய மிருகக்காட்சிச் சாலையில் வளர்ந்தார். சிறுவனாக இருக்கும் போதே முதலைகள், மற்ற மிருகங்கள் வாழ்ந்த சூழலில் வளர்ந்த காரணத்தால் சிறு வயது முதலே மிருகங்களைக் கண்டு அச்சம் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். 1979ஆம் ஆண்டில் உயர்நிலைக் கல்வியை முடித்த பின்னர் வடகுயின்ஸ்லாந்து மாநிலத்தில் வழி தவறிய மற்றும் மனிதர்களுக்கு அபாயத்தை விளைவிக்கும் முதலைகளைப் பிடித்து பொருத்தமான இடங்களில் அவற்றை மீள் குடியேற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.
 அவ்வாறு ஐந்தாண்டுகள் சுற்றித் திரிந்த பின்னர் குடும்பத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த மிருகக்காட்சிச் சாலையை 1991ஆம் ஆண்டில் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார். அந்த மிருகக்காட்சிச்சாலைக்கு அவுஸ்திரேலிய மிருகக்காட்சிசாலை என்று 1992இல் மறு பெயரிடப்பட்டது. இன்று வரை வெற்றிகரமாக அது செயல்பட்டு வருகிறது. 1992ஆம் ஆண்டில் அந்த மிருகக்காட்சிச் சாலையில் தான் தன் வருங்கால மனைவி டெர்ரி ரெய்ன்லை அவர் சந்தித்தார். திருமணத்துக்குப் பிறகு தேனிலவைக் கொண்டாடும் வகையில் தம்பதியர் இருவரும் முதலைகளைப் பிடிக்கும் நிகழ்ச்சியை அவர்களது மனேஜர் ஜோன் ஸ்டேயின்டன் தொலைக்காட்சிப் படமாக செய்த ஒளிப்பதிவு தான் உலகெங்கிலும் பரவலாக
புகழ் பெற்ற 'தி குரோக்கடைல் ஹண்டர்' தொலைக் காட்சி தொடரின் முதல் நிகழ்ச்சியாக அமைந்தது. ஸ்டீவ் இர்வின் இயற்கைச் சூழலையும் அங்கு உயிர் வாழ்வனவற்றையும் கட்டிக்காக்க வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை காட்டி வந்தார். 


இறப்பு

The Crocodile Hunter Steve Irwin(முதலை வேட்டைக்காரர் ஸ்டீவ் இர்வின்)
ஸ்டீவ் இர்வின் ஸ்டிங்ரே வகை மீனால் தாக்கப்பட்டு இறப்பார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை . குயின்லாந்து மாநிலம் இவருக்கு அரசாங்க மரியாதையுடன் இறுதி அடக்கம் செய்யத் தயாராக இருந்தது.
அதற்கு இணங்க மறுத்த ஸ்டீவ் இர்வினின் தந்தை "என் மகன் சாதாரண மனிதன் தான். அவனுக்கு அவ்வளவு பெரிய மரியாதை வேண்டாம்” என மறுத்து விட்டார். மிருகங்களை நேசித்த, மிருகங்களின் இயற்கையான வாழ்வுச்சூழலை நிச்சயப்படுத்த தினமும் போராடி வந்த இயற்கை இயல்வாதி ஸ்டீவ் இர்வினின் இறப்பு இவ்வளவு விரைவாக ஏற்பட்டு விட்டதை பதினைந்து  ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

Post a Comment

Previous Post Next Post