4G,3G இன்டர்நெட் பிராட்பேண்ட் எல்லாம் இல்லாத காலம் அது. இன்டர்நெட் உலகில் நீங்கள் கால்பதிக்க வேண்டுமென்றால், டயல் ஒப் பேக்கேஜ்கள் வாங்க வேண்டும். இன்டெர்னல் மொடம் கொண்டு கனெக்ட் செய்ய வேண்டும். அந்த இன்டர்நெட் வசதியும் நம் 2G வேகத்தைப் போல தட்டுத் தடுமாறி நம்மை அலைக்கழிக்கும். வெறும் மெயில் செக் செய்யவே அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்படிக் காத்திருக்கும்போது பொழுது போக விண்டோஸ் மென்பொருளுடன் இணைப்பாக வரும் கேம்ஸ்கள் மிகவும் உதவும். அவற்றுள் முதன்மையானது சொலிடர் (solitaire 247) ஆட்டம். ஒழுங்கில்லாத நிலையில் இருக்கும் சீட்டு கட்டை வரிசைப்படி, டிசைன் படி ஒழுங்காக அடுக்க வேண்டும். கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தி விளையாட வேண்டிய இந்த ஆட்டம், மிகவும் சுவாரஸ்யமானது. இப்போதும் இதற்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் உண்டு. இந்த சொலிடர் ஆட்டத்தின் கதை தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் அதை உருவாக்கியது ஒரு குழுவோ அல்லது ஓர் அனுபவசாலியோ அல்ல. அவர் ஒரு சாதாரண பயிற்சியாளர்.
வெஸ் செர்ரி என்பவர் 1988 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பயிற்சி பெற (Intern) வந்தவர்களில் ஒருவர். பயிற்சி பெறவே வந்திருந்தாலும் தங்களுக்கும் இலக்கு, நிறைய வேலைகள் இருந்தன. அதற்கிடையில், அவ்வப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனக்குப் பிடித்த வேலைகளைச் செய்வார் வெஸ். அப்படி ஒரு நாள் வேலை இல்லாத தருணத்தில் உதித்த யோசனைதான் இந்த சொலிடர் ஆட்டம். இந்தச் சுவாரஸ்ய கதை குறித்து வெஸ் செர்ரி இவ்வாறு விவரிக்கிறார். அப்போதெல்லாம் கேம்ஸ் குறைவாகத்தான் இருக்கும். நாங்கள்தான் புதிதாக உருவாக்க வேண்டும். இந்த ஆட்டத்தில், ஒழுங்கில்லாமல் இருக்கும் சீட்டுக்கட்டை எண் வரிசைப்படி, டிசைன் படி அடுக்க வேண்டும். வெற்றிபெற்றால் அடுக்கடுக்கான கார்டுகள் (Cascading Cards) திரையை நிரப்பும். இந்த அனிமேஷன் மிகவும் பிரபலமான ஒன்று. பில்கேட்ஸ் அவர்கள் இந்த ஆட்டத்தைப் பார்த்துவிட்டு முதலில் சொன்ன விடயம் வெற்றிபெறுவது மிகவும் கடினமாய் உள்ளது என்பதுதான். ஆரம்பகாலத்தில் மவுஸை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மக்கள் கற்றுக்கொள்ளவே இந்த ஆட்டம் என்று விளம்பரப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம். ஆனால், உண்மையில் அது ஒரு ஜாலியான ஆட்டம். பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று உண்மையை உடைக்கிறார் வெஸ். 1990ஆம் ஆண்டு வெளியான விண்டோஸ் 3.0 மென்பொருளில் முதன் முதலில் வெளியான சொலிடர் ஆட்டம் தற்போதைய விண்டோஸ் 10 வரை தவறாமல் இடம்பெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் வெஸ் ‘பாஸ் கீ' (Boss Key) என்ற ஒரு வசதியை வைத்திருந்தார். அதாவது இதை அலுவலகத்தில் விளையாடிக்கொண்டிருக்கும்போது பாஸ் வந்துவிட்டால், இந்த கீயை அழுத்தினால் போதும். ஒரு எக்ஸல் ஸ்ப்ரெட்சீட் ஓப்பனாகி விடும். பின்பு நீங்கள் வேலை செய்வதுபோல் நடித்தால் போதும். பாஸிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், மைக்ரோசாப்ட் இந்த வசதியைப் பின்னர் நீக்கிவிட்டது.
அதெல்லாம் சரி. இப்படி ஒரு சரித்திர சாதனையைச் செய்த வெஸ் செர்ரிக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் என்ன செய்தது? எனக்கு இதற்காக எந்தப் பணமும் மைக்ரோசொப்ட் இதுவரை கொடுக்கவில்லை. ஒவ்வொரு முறை இந்த ஆட்டம் பிரதி எடுக்கப்படும் போதும் எனக்கு ஒவ்வொரு ரூபாய் கிடைத்திருந்தாலும் இப்போது நான் கோடீஸ்வரன் ஆகியிருப்பேன்! என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார். சொலிடர் கேம் நம் அன்றாட வாழ்வில் ஒன்றாகி விட்டது. ஆனால், இதை உருவாக்கிய வெஸ் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா? அப்பிளுடன் வேலை செய்கிறார். அப்பிள் என்றால் மைக்ரோசாப்ட்டின் போட்டி நிறுவனம் 'அப்பிள்' அல்ல. அப்பிளிலிருந்து சைடர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். சாதனையாளர்களை சார்ந்தவர்கள் மறந்துவிட்டாலும், சரித்திரம் மறப்பதில்லை.