Wish Online Shopping Startup Story

இணையக்கடைகளுக்கென்று ஒரு தனி மரபுண்டு. பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கவேண்டும், உள்ளே நுழைந்தவுடன் நூற்றுக்கணக்கான வகைகளில் லட்சக்கணக்கான பொருட்களை பட்டியலிட வேண்டும். அதில் வேண்டியவற்றை எளிதில் தேடி வாங்கும் வசதியிருக்க வேண்டும். நல்ல brand தயாரிப்புகள் பயங்கர தள்ளுபடியில் கிடைக்க வேண்டும். எதை வாங்கினாலும் அடுத்த சில நாட்களுக்குள் அது கைக்கு வந்துவிடவேண்டும். முக்கியமாக வாங்கிய பொருளின் தரம் பிரமாதமாக இருக்கவேண்டும்.

Wish Online Shopping Startup Story
உலகெங்கிலும் இயங்கி வரும் இணையக்கடைகள் எல்லாமும் இந்த விதிமுறைகளைத்தான் பின்பற்றிக்கொண்டிருக்கின்றன.
இவைகள் தான் இணையக்கடைகளை வெற்றிபெற செய்யும் அம்சங்கள் என்று பொதுவாக நம்பப்படுகின்றது . புதிதாக இணையத்தில் கடை போடுகின்ற அனைவரும் இவற்றை இலக்காக கொண்டுதான் செயல்படுகின்றனர். ஆனால் இந்த விதிமுறைகளில் எவற்றையுமே பின்பற்றாமல், சொல்லப் போனால் பல விதங்களில் இவற்றை மீறிச்சென்று பெரு வெற்றியடைந்த ஒரு இணையக் கடை இருக்கின்றது. அதன் பெயர் "Wish'!

"இப்படியொரு கடையை கேள்விப்பட்டதேயில்லையே'' என்று சொல் வீர்களேயானால் , உங்கள் வயது முப்பதை தாண்டிவிட்டது என்று அர்த்தம் - உலகெங்கிலும் இளைஞர்கள் ஆர்வத்தோடு சுற்றிவரும் சூப்பர் ஹிட் கடை இது. ஆரம்பித்த சில வருடங்களிலேயே அமேசான் போன்ற பெரும் தலைகளுக் கெல்லாம் சவால் விடும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.

சரி , விஷ்ஷில் அப்படியென்ன விசேஷம் ? இந்த இணையதளத்தில் (அல்லது மொபைல் அப்பிளிக்கேஷனில் ) நுழைந்ததுமே நம்மை ஈர்க்கிற விடயம், வரிசையாக புகைப்படங்களை அடுக்கிவைத்திருக்கிறார்கள் இங்கே ஒரு சட்டை , அங்கேயொரு கைப்பை, இந்தப் பக்கம் ஒரு பொம்மை, அந்தப் பக்கம் ஒரு நகை , கீழே ஒரு ஷால் , அதனருகேயொரு காலணி ஜோடி ... இப்படி ஒரு புகைப்பட ஆல்பம் போல் வரிசையாக பொருட்கள்... கீழே செல்லச் செல்ல மேலும் மேலும் பொருட்கள் குவிந்து கொண்டே செல்கின்றன எத்தனை வண்ணங்கள் எத்தனை வடிவங்கள் இப்படியெல்லாம் பொருட்கள் இருக்கின்றனவா ? என வியப்பூட்டும் புதுப்புது மாடல்கள். இதில் ஆச்சர்யமான விடயம் , இந்தப் பொருட்களின் விலை . சாதாரணமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் பொருள் இங்கே நூறு ரூபாய்க்கு கிடைக்கும் . 80% தள்ளுபடியெல்லாம் இங்கே சர்வசாதாரணம் . சரி இந்தப் பொருளை வாங்கலாம் என எதையாவது தேர்ந்தெடுத்து க்ளிக் செய்தால் , அடுத்த மாதம் தான் டெலிவரி செய்வோம்" , என்பார்கள்! "என்னது பொருள் வாங்க ஒரு மாதம் காத்திருக்கவேண்டுமா'' ?

Wish Online Shopping Startup Story
பின்னே ? ஆயிரம் ரூபாய் பொருளை எழுபது ரூபாய்க்கு வாங்க வேண்டுமென்றால் சும்மாவா ? அந்த பொருள் சீனாவின் ஒரு மூலையிலிருந்து உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் அதற்கு சில வாரங்களாகும் . சம்மதம் என்றால் வாங்கிக்கொள்ளுங்கள். சீனாவில் இருந்து இத்தனை தூரம் வருகிற பொருள் தரமாக இருக்குமா? ஒருவேளை மோசமாக இருந்து விட்டால்? வரும் வழியில் உடைந்து விட்டால்? அது உங்கள் தலைவலி. மலிவான பொருளை வாங்குவதென்றால் அந்த ஆபத்துக்கும் தயாராகத்தான் இருக்க வேண்டும்! யோசித்துப் பாருங்கள் அமேசனோ , ஈபேவோ , பிளிப்கார்ட்டோ இப்படி சொன்னால் நாம் சும்மாவிடுவோமா? அவாகளுடைய சட்டையை பிடித்து நாம் கேள்வி கேட்க மாட்டோமா? ஆனால், இதுதான் விஷ்ஷின் தனித்துவம். விஷ் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. "உங்கள் பொருட்கள் பல வாரங்கள் கழித்து தான் வரும் தரமும் கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும். இஷ்டமானால் வாங்கிக் கொள்ளுங்கள்" , என வெளிப்படையாக சொல்லிவிடுகின்றார்கள்.

"அட , ஏதோ உருப்படாத கம்பெனி போல இதைப் பற்றியேன் எழுத வேண்டும் ? என யோசிக்கிறீர்களா ? நீங்கள் எண்ணியது தவறு ஏனெனில் கடந்த சில ஆண்டுகளில் விஷ்போல அதிவேகமாக வளர்ந்த இணையக்கடை வேறேதுமில்லை அமேசானும் மற்ற போட்டியாளர்களும் பல பத்து ஆண்டுகளாக முனைந்து பெற்ற வளர்ச்சியை அதிவேகமாக எட்டிப்பிடித்து சளைக்காமல் ஓடிக்கொண்டிருக்கின்றது இந்தக்கடை. என்ன காரணம் ? தரத்தில் சமரசம் செய்துகொள்கிற எந்த நிறுவனமும் சரியாக முன்னேற முடியாது என்றல்லவா சொல்வார்கள்? பின் எப்படி விஷ்ஷினால் இப்படி வளர முடிகின்றது? என்னதான் விலை மலிவாக கிடைத்தாலும் , சுமாரான தரத்தில் அதுவும் தாமதமாக கிடைக்கும் பொருட்களை ஏன் மக்கள் வாங்குகிறார்கள் ? அங்கேதான் விஷ்ஷின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகின்றது.

தன்னுடைய கடையில் எல்லா விதமான பொருட்களையும் விற்பதில்லை. மக்களுக்கு உடனடியாக தேவைப்படாத , அவர்கள் அதிகம் செலவழிக்க விரும்பாத, தரம் கொஞ்சம் முன்னேபின்னே இருந்தாலும் பரவாயில்லை என நினைக்கிற பொருட்களை மட்டுமே விற்கிறார்கள். அப்படி நினைப்பவர்களுக்கு மட்டுமே விற்கிறார்கள். விஷ்ஷின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இளைஞர் கள். அவர்கள் மிகப் பெரிய தொகையொன்றினை செலவழிப்பதென்றால் யோசிப்பார்கள். நல்ல பொருட்களை தேடிப்பிடித்து பல இடங்களில் விசாரித்து, விலை ஒப்பிட்டுப்பார்த்து வாங்குவார்கள். ஆனால், ஒரு சுரிதார் டாப்போ, செருப்போ வாங்குவதற்கு அவ்வளவு மெனக்கெட மாட்டார்கள். அதுவும் பெரிய தொகை தள்ளுபடியில் கிடைக்கிறது என்றால் சட்டென்று வாங்கிவிடுவார்கள். கடைக்குச் சென்று அல்லது மற்ற பிரபல இணையக்கடைகளில் பொருள் வாங்குவதோடு ஒப்பிட்டால், இது ஆபத்தான விஷயம்தான். தரமில்லாத ஆடைகள், கிழிந்த ஆடைகள் வரக்கூடும். அளவு பொருந்தாமல் போகக் கூடும். ஆனால் இதனை பெரிய தள்ளுபடியில் வாங்கும் போது இது போன்ற பிரச்சினைகளுக்கும் தயாராகத்தானே இருக்க வேண்டும் , காசுக்கேற்ற தோசை என்று அவர்கள் நினைக்கிறார்கள் இதே மனோபாவத்தை பயன்படுத்தி விஷ் பெரிய பொருட்களையும் விற்கிறது எடுத்துக்காட்டாக வெளியே பல மடங்கு விலையில் விற்கப்படும் ஒரு பொருள் விஷ்ஷில் சில ஆயிரம் ரூபாய்களில் விற்கப்படுகையில், "ஒரு முயற்சி செய்துதான் பார்ப்போமே'' என்று தான் பலரும் நினைப்பார்கள்.

Wish Online Shopping Startup Story
ஒரு விதத்தில், தெருவோரக்கடைகளில் பொருள் வாங்கும் நம்முடைய மனோபாவத்தைத்தான் விஷ் பிரதிபலிக்கிறது. காசை மிச்சப்படுத்த வேண்டும், அதற்காக தரத்தில் கொஞ்சம் சமரசம் செய்துகொள்வோம் என நினைப்பவர்களை கவர்ந்திழுக்கிறது விஷ்! இங்கே விற்கப்படும் பொருட்கள் எவையுமே பெரிய நிறுவன தயாரிப்புகள் அல்ல - உலகெங்கிலும் வெவ்வேறு நாடுகளில், பல சிறு தொழிற்சாலைகளில் இவை தயாராகின்றன. இவற்றை அங்கிருந்தே வாடிக்கையாளர்க்கு அனுப்புவதன் மூலம், எல்லா இடைத்தரகர்களை தாண்டி விஷ் பணத்தை மிச்சப்படுத்துகிறது.

ஆகவேதான் , பெரிய தள்ளுபடியில் பொருட்களை விற்க முடிகிறது. அதற்காக விஷ்ஷில் கிடைக்கும் எல்லாமே தரமற்ற பொருட்கள் என நினைக்கவும் முடியாது. இயன்றவரை தரமான பொருட்களையே சேர்க்க முயல்கின்றனர். ஆனால் அது பற்றி எந்த உத்தரவாதமும் அளிப்பதில்லை . இங்கே தொடர்ந்து பொருள் வாங்கிப் பழகியவர்கள் “அவ்வப்போது சொதப்பினாலும் பெரும்பாலும் பிரச்சினையில்லை" என்கிறார்கள். ஓரளவு தரம் , மிகக் குறைவான விலை அவ்வளவுதான் -விஷ்ஷின் இந்த வியூகத்தை பார்த்து போட்டியாளர்கள் திகைக்கிறார்கள். அவர்கள் நினைத்தாலும் இந்த அளவிற்கு கீழே இறங்கமுடியாது. ஆகவே இந்த சந்தையை விஷ் அள்ளிக்கொண்டுபோவதை வெறுமனே வேடிக்கை பார்க்கிறார்கள் . நாளுக்குநாள் விஷ்ஷில் பொருட்களை விற்போர், வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது . ஒருபக்கம் நன்கு செலவளிக்கக்கூடிய நடுத்தர வயதினர் மீது கவனம் செலுத்தாமல், இளைஞர்களை குறிவைத்து ஜெயிக்கிறது விஷ். இன்னொரு பக்கம் பெரிய நிறுவனங்களை நம்பாமல் சிறு தொழில்களை வைத்தே தன்னை ஒரு தனித்துவமான இணையக்கடையாக அமைத்துக்கொண்டு விட்டது பொதுவாக இன்றைய இளைஞர்களின் மொபைல் பழக்கத்தை விஷ் நன்கு புரிந்துவைத்துள்ளது . அவர்கள் எதை பார்ப்பார்கள் , எதை எதிர்பார்ப்பார்கள் , எதை வாங்குவார்கள் , எதை வாங்கமாட்டார்கள் என்று புரிந்துகொண்டு கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள் விஷ்ஷில் நுழைந்த எல்லோருமே வியப்போடு சொல்லும் விடயம் "இங்கே காட்டப்படும் பொருட்கள் எல்லாமே எனக்கென்று வைத்திருப்பதுபோல உள்ளது. அத்தனையும் பிடித்திருக்கிறது" என்பதே ....... இது எதேச்சையாக நிகழ்வதில்லை . இங்கே வருகிற ஒவ்வொருவரையும் கவனமாக அலசி, அவர்களுக்கு ஏற்ற , அவர்கள் விரும்பி வாங்கக்கூடிய பொருட்களாக பார்த்துப் பார்த்து பட்டியலிடுகிறது விஷ் . யாரிடம் எதைக்காட்டினால் வாங்குவார்கள் என தெரிந்து செயற்படுகிறார்கள் . இந்த புத்திசாலித்தனமான தொழில்நுட்பம் தான் அவர்களை மற்ற போட்டியாளர்களிடமிருந்து முன்னே நகர்த்தியுள்ளது . விஷ்ஷை ஆரம்பித்த piotr szylczewski , Danny zhang இருவரும் அதற்குமுன் கூகுள், யாஹூவில் வேலைபார்த்தவர்கள். அங்கே இணையத்தில் மக்கள் தேடும் விதம் , தேடுகிற பொருட் கள், அவர்களுக்கு காட்டப்படும் விளம்பரங்கள் போன்றவற்றைப் பற்றி இவர்கள் நன்கு அறிந்திருந்தனர். . எப்போது யாரிடம் எந்த விளம்பரங்களைக் காட்டினால் பலன் இருக்கும் என்று கண்டறியும் நுட்பங்களை புரிந்து கொண்டார்கள் . அதன்பிறகு இவர்கள் இருவரும் இந்தப் பெரிய நிறுவனங்களிலிருந்து வெளியேறி ஓர் புது நிறுவனத்தை தொடங்கினார்கள். Contextlogic inc என்கிற அந்த நிறுவனத்தின் நோக்கம் , இணையத்திற்கு வருகிறவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு பிடிக்கக்கூடிய, அவர்கள் க்ளிக் செய்யக் கூடிய விளம்பரங்களைக் காட்டுவது . கிட்டத்தட்ட இதேநேரத்தில் தான் மொபைல் போன்ஸ் பெரிய அளவில் பிரபலமாக தொடங்கியிருந்தன.


Wish Online Shopping Startup Story
வருங்காலத்தில் மக்கள் கணினியைவிட மொபைலில்தான் அதிகம் தேடுவார்கள் , அதிகம் வாங்குவார்கள் என ஊகித்திருந்தனர் பீட்டர் மற்றும் டேனி . ஆக , மக்கள் எதை தேடுவார்கள் எதை விரும்புவார்கள் என்பதும் தெரியும் எங்கே தேடுவார்கள் என்பதும் தெரியும் . இந்த இரண்டையும் இணைத்து ஓர் இணையத்தளத்தினை தொடங்கினால் என்ன என்று இவர்கள் யோசி த்தார்கள் , விஷ் உருவானது 2010 ஜூலை 04 அமெரிக்காவின் சான்பி ரான்சிஸ்கோ நகரில் ஆரம்பத்தில் வெறும் புகைப்பட தொகுப்பாக இருந்த விஷ் , விரைவில் ஓர் இணையக்கடையாக மாறி யது . மொபைல் தொழில்நுட்பதை நன்கு பயன்படுத்திக் கொண்டு, இளைஞர்களின் நம் பிக்கையை பெற்றுவிட்டது . பெரிய முதலீட் டாளர்களெல்லாம் விஷ்ஷை தேடி வந்து பணத்தை கொட்டுகிறார் கள் இதுதான் மின்வணிகத்தின் எதிர் காலம் என்கிறார்கள் - 2019ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி விஷ்ஷின் மொத்த வருமானம் 11.2 பில்லியன் அமெரிக்க டாலர்ஸ். இன்னொரு பக்கம் விஷ்ஷின் வெற்றி நிலைக்காது என்பவர்களும் உள்ளார்கள் - மக்கள் குறைந்த விலைக்காக இப்போது விஷ்ஷில் வந்து விழுந்தாலும் , விரைவில் அவர்கள் எரிச்சலடைந்து வெளியேறிவிடுவார்கள், இந்த வளர்ச்சியை அதனால் தக்கவைத்துக்கொள்ள முடியாது என்பது இவர்களது கணிப்பு.

தொழில்நுட்பதின் துணையோடு, ரசிக்கக் கூடிய வாங்கும் அனுபவத்தை தரவேண்டும் என்பதுதான் விஷ்ஷின் இலக்கு இளைஞர்களை புரிந்துவைத்திருப்பது அதன் பலம். இதனை எந்த அளவிற்கு அவர்களால் முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டிய நாம், இந்த நிறுவனத்திடமிருந்து கற்றுக்கொள்ளக்கூ டிய பாடம் ஒன்றுமுள்ளது. அதுதான் மாற்றி யோசித்தல் எல்லா இணைய நிறுவனங்களும் தரம், பெஸ்ட் சர்வீஸ், குயிக் சர்வீஸ், என தங்கள் நிறுவன மேம்பாட்டை தக்கவைத் துக்கொள்ள போராடும் தருணத்தில், ரொம்பவும் கேஷுவலாக, கூலாக தரத்தில் சமரசம் செய்துகொள்ள தயாராக இருக்கும் இளைஞர்களை குறிவைத்து, மிகக்குறைந்த விலையில் பொருட்களை கொடுக்க முன்வந்து இன்று தமக்கென ஓர் இடம் பிடித்துள்ள "விஷ்'' என்கிற இணைய நிறுவனத்தின் மாற்றுயோசனைகூட நமக்கான தொழில் ஆலோசனையாக இருக்கலாம் இல்லையா?

Post a Comment

Previous Post Next Post