அம்மாச்சி

"குறுக்கால போவானே..."

நகரமும் இல்லாத, கிராமத்திலும் சேராத, காடென்றும் கூற முடியாத 'மூன்றும் கெட்டான்' தனமான அந்த இடத்தில் ஒரு மதகில் நாடிக்குக் கை கொடுத்து இருந்து கொண்டு யாரோ முகம் தெரியாத ஒரு பெண்ணின் கூச்சலைக் கேட்பது தங்கவேலுவிற்கு சிறிது சங்கடமாயிருந்தது.

பஸ்ஸையும் காணவில்லை. நடப்பதென்றால்!

பள்ளமும் திட்டியும் கல்லும் புழுதியும் சங்கமமான அந்த இரட்டைமாட்டு வண்டிப் பாதையில் ஏழு மைல்கள். நினைத்துப் பார்க்கவே களைப்பு வந்தது. அவனை நகரத்திலிருந்து சுமந்து வந்த பஸ் ஆற்றுக்கு அந்தப் பக்க ஆலமர நிழலில் காத்திருந்தது. இனி - இந்தப் பக்கத்து பஸ் வந்து ஆட்கள் வள்ளத்தில் ஆற்றைக் கடந்து ஏறிய பின்தான் அது புறப்படும். அதுவரை டிரைவரும் கண்டக்டரும் தூங்கி வழியும் தேநீர்க்கடையில் அடிக்கடி பிளெயின்ரீ அடிக்க வேண்டும், பீடி பிடிக்க வேண்டும். ஊர் நிலவரம் கதைக்கக் கூட கடைக்காரனை விட்டால் வேறு ஆளில்லை.

ஆறு அழகாய்த்தான் ஓடிக் கொண்டிருந்தது. இரு கரைகளிலும் சல்வீனியாப்பச்சை ஆற்றையே நோஞ்சானாக்கி விடுகிற அளவிற்கு ஆக்கிரமிப்புச் செய்திருக்கிறது. எதில் இல்லை பலாத்காரம்..... எங்கு இல்லை ஆக்கிரமிப்பு. ஒன்றை மறைத்து இன்னொன்று உயர்வதும், ஒருவனை அழித்து இன்னொருவன் வளர்வதும் இயற்கையின் அடிநாதமே இதுதானோ!

ஆற்றின் இந்தப் பக்கம் அநாவசியமாய் கற்கள் நிறைந்திருந்த இறக்கமான இடத்தை அண்டிய பகுதிதான் ஆற்றுப்படுகையின் துறைமுகம். மட்டிச் செதிள்கள் பற்றிப் பிடித்த தூண் ஒன்றில் கட்டியிருந்த கயிற்று நுனியில் பாசி பிடித்த வள்ளமொன்று நீரோட்டத்தில் அசைந்து கொண்டிருந்தது. அதனைச் சுற்றிப் பிடித்திருந்த சல்வீனியாப் பச்சை தானும் அசைந்து வள்ளத்திற்குச் சாமரம் போடுவது போல நளினம் காட்டிற்று.

வள்ளக்காரனைக் காணவில்லை. நாரைக் கொக்கொன்று குக்கூ குக்கூவென கூவிக்கொண்டு நீருக்கு அணித்தாய்ப் பறந்தது. மீன்கள் தலைகாட்டினால் போதும், ஒரே கொத்து. ஒன்றை அழித்து இன்னொன்று!

கிழக்கு வானில் சூரியன் ஏற ஏற வெய்யில் இன்னும் கொளுத்தப் போகிறது. அதற்குள் பஸ் வந்துவிட்டால் போய்விடலாம். தங்கவேலு பஸ் வருகிறதாவெனப் பார்த்தான். ஜீவனற்ற அந்தப் பாதையைப் பார்க்கையில் அது இப்போதைக்கு வராது என்றே தோன்றிற்று. நேரத்தைப் பார்த்தான். அதிகாலை ஐந்து மணிக்குப் புறப்பட்ட பயணம். இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ!

நகரத்திலிருந்து கிராமம் முழுவதுமே முப்பத்தியேழு மைல்கள்தான். வழியில் எட்டு பரிசோதனைத் தரிப்பிடங்கள். டிரைவர் தூரத்திலேயே நிற்பாட்டி விடுவான். கடந்த சில மாதங்களாய் அனுபவத்தில் முதிர்ந்து விட்டதால், ஐடென்டிகாட்டை எடுத்துக் கொண்டு இறங்குங்கோ என்று ஒவ்வொரு இடத்திலும் வெகு இயல்பாய் சொல்வான் கண்டக்டர் பயணிகளுக்குத்தான் உளைவு தெரிந்தது.

ஐடீ காட்டி, விருப்பமில்லாமல் சிரித்து, வெளியே அள்ளிப்போட்ட துணிகளைப் பையில் திணித்து, இழுபட்டு ஏறி இது நானிருந்த இடம் என்று வாதிட்டு இருக்கையைக் காப்பாற்றி.... மீண்டும் அடுத்த இடத்தில் இறங்கி, ஐடீ காட்டி..... ஒரு விதமாய் ஆற்றைக் கடந்து மதகில் குந்தி நாடியில் கை வைக்க மணி எட்டாகிவிட்டது.

“குறுக்கால போவானே இஞ்சால வாடா"..... மீண்டும் அதே ஓலம் கேட்டது.

சே என்ன பெண் இவள், யாரைக் கூப்பிடுகிறாள்?

இற்றுப்போன சில தகரத் துண்டுகளைக் கொண்டு தாறுமாறாய் கூரையிடப்பட்டு எதிரேயிருந்த அந்தக் குடிசையிலிருந்துதான் சப்தம் வந்தது. முண்டு கொடுத்த தட்டியும், காலி முட்டாசிப் போத்தல்களும் அந்தப் பக்கத்தில் அதுவே ஒரேயொரு தேநீர்க்கடை என்பதை நிரூபணம் செய்தன. துறைமுகத்தில் இறங்கும் மக்கள் நடந்து நடந்து, புற்கள் நசிந்து நசிந்து, அதுவே பாதையாகி முடியும் இடத்தில் இருந்தது குடிசை. வாங்கு என்ற பெயரில் துண்டாடிச் சீவிய காட்டுமரம் வாசலில் இருமருங்கும் இருந்தது. பக்கத்தில், பின்னால், எதிரே வேறு மனைகளே தென்படவில்லை. தங்கவேலு நாடியிலிருந்து கையை விடுவித்து வளைந்த முதுகை நிமிர்த்தி சோம்பல் முறித்தான்.

அவனோடு பஸ்ஸில் வந்து வள்ளமேறி இந்தப் பக்கம் இறங்கிய நாலு பேரில் இருவர் நடையிலேயே போய்விட்டார்கள். மிஞ்சியவர்கள் கூப்பிடு தொலைவில் தெருவோர இலந்தை மரத்திற்கு கல்லெறிந்து கொண்டிருந்தார்கள். வாடிக்கையாளரைக் காணவில்லை. இப்போதெல்லாம் இங்கு மட்டுமல்ல நகரங்களில் கூட ஜன நடமாட்டம் குறைந்துதான் போய்விட்டது.

அம்மாச்சி
குடிசையுள்ளே மங்கிய வெளிச்சத்தில் ஒரு சேலை நிழலாடியதைக் கண்டதும் அசைவையும் குரலையும் வைத்து அப்பெண்ணுக்கு முப்பத்தைந்து வயதிருக்கும் என்று மட்டுக் கட்டிக் கொண்டான் தங்கவேலு.

மரவாங்கிற்குப் பின்னால் நிழலுக்குப் பச்சைப் பசேலென்று குடை விரித்த வேப்ப மரம். பக்கத்தில் அளவாகப் பிளந்து கட்டப்பட்ட காட்டுக்கொள்ளி விற்பனைக்குத் தயார். கடைக்குப் பின்னால் கையளவு தோட்டம். மொந்தன் வாழை பொத்தி தள்ளியிருந்தது. பூசனிப் பற்றையில் விரிந்த மஞ்சள் பூக்கள் சிரித்தன. சோளம் பாரம் தாங்காமல் சரியத் தொடங்கியிருந்தன. வரிச்சுத்தடி மேடையில் கல்லுக்கட்டிய புடலம் பிஞ்சுகள்.....

அவளின் புருசன் சொந்தக்காலில் நின்று நேர்மையாக கடுமையாக உழைக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அவன் கடைக்குள் இருப்பதாகத் தெரியவில்லை. வெள்ளனையோடு கொள்ளி வெட்ட காட்டிற்குள் போயிருப்பான். மதியமோ இரவோ வெட்டிய கொள்ளிக் கட்டுகளோடு வந்து சேர்வான்.

இவள் கடையைப் பார்த்துக் கொள்வாள். இடையிடையே பழஞ்சேலை சுற்றிக் கட்டிய மாதுளம் பிஞ்சுகள் முற்றிவிட்டதா என்று பிரித்துப் பார்த்துக் கொள்வாள். மரவள்ளிக் கிழங்கு பிடுங்குவாள். சமைத்தும் கொள்வாள்.

என்ன இருந்தாலும் பக்கத்தில் இனமும் இல்லாமல் சனமும் இல்லாமல், நீயா நானா போட்டிகள் இல்லாமல், தொலை தூரத்திலே இருக்கும் கன்னி கழியாத காட்டை நம்பி, தங்கள் உடல் உழைப்பை நம்பி, பொத்தி தள்ளிய வாழையை கல்லுக் கட்டிய புடலையை நம்பி, கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு தட்டத் தனியனாய் இப்படி வாழ்வது உசத்திதான் சுதந்திரந்தான். இருந்தால் உண்பார்கள், இல்லாவிட்டால் வயிறு காய்வார்கள். யாரையும் வஞ்சிப்பதில்லை யாராலும் வஞ்சிக்கப்படுவதும் இல்லை.

அவளது புருசனைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. நாள் முழுக்க கொள்ளி கொத்துகிறவன் தசை நாரெல்லாம் இறுகி, மெலிவாய் ஆரோக்கியமாய்த்தான் இருப்பான். பீடி பிடிப்பானோ தெரியாது. தண்ணீ!..... உடம்பு அலுப்புக்கு எப்போதாவது போடக் கூடும். வேறென்ன பொழுதுபோக்கு இவர்களுக்கு. ரீவியா, வீசீஆரா? அவனுக்கு அவளும், அவளுக்கு அவனுமாகத்தான் பொழுது போக வேண்டும். இந்தக் காட்டுச்சூழலில் இருட்டிவிட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்? எப்படிச் சமாளிப்பார்கள்?

குடிசையை இருட்டு கவ்வி மூடிக் கொள்ளும். ஆற்றோரமிருந்து சீதளக்காற்று வீசும். தவளைக்கூட்டம் கவ்வா கவ்வா என இரவு முழுக்க இராகம் பாடும். இவர்களுக்கு இதெல்லாம் பழகிப் போயிருக்கும். மண்ணெண்ணை விளக்கில், அது சிந்துகிற மங்கிய வெளிச்சத்தில் பிய்ந்த பாயில் ஒன்றாகப் படுத்து…

"குறுக்கால போவானே எங்கையடா தொலைஞ்சாய்"

சே இதென்ன இழவு வீட்டில் பறையடிப்பது போல விட்டு விட்டுக் கத்துகிறாள். குறுக்கால் போவதென்பதற்கு அர்த்தம் புரியாதா இவளுக்கு. யாரைக் குறித்து இப்படிக் கத்துகிறாள். புருசனையா? பிள்ளையையா? யாரையும் காணவில்லையே!

அந்தப் பெயர் தெரியாத காட்டுவாசிப் பெண்ணில் இப்போது அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. பேசிப் பேசியே இந்த அமங்கல வார்த்தைகள் பழகிப் போய்விட்டது. ஒரு குடும்பப் பெண்ணுக்கு இது அழகில்லை. புருசன் இவளைக் கண்டிப்பதில்லையா? என்ன ஜென்மம்!

ட்ட்றூ... ட்ட்றூ...

வாயால் கார் ஓடும் ஓசை பின்னாலிருந்து கேட்டுத் திரும்பினான் தங்கவேலு. சின்னப் பையன். பத்து வயதிற்கு மேலிருக்காது. நண்டுக் குஞ்சொன்றை நூலில் கட்டியிருந்தான். பொத்தான் இல்லாத காற்சட்டை அவிழ அவிழ சொருகிக் கொண்டான். மெல்லிய வியர்வையும் புழுதியும் அவனது கறுப்போடு கலந்து வெய்யிலுக்கு ஜொலித்தது. ஓடும் ஆற்றில் அமிழ்த்திக் குளிப்பாட்டி எடுத்து தலை சீவி பவுடர் போட்டு விட்டால் வடிவாக இருப்பான். பார்த்தவுடன் பட்டென்று மனதைப் பற்றிக் கொள்ளும் காட்டுக் காளை. இவன்தான்... இவன்தான்... அவள் அடிக்கடி கத்திக் கூப்பிடும் அந்தக் குறுக்... தங்கவேலு நாக்கைக் கடித்துக் கொண்டான்.

பையனின் கார்ச்சத்தம் கேட்டு பத்ரகாளி வெளியே வந்தாள். வயசு முப்பது இருக்கும். கறுப்புத்தான். குரலின் கடுமையும் தோற்றமும் ஒத்துப் போகவில்லை. இறுக இளைத்த கடகப்பெட்டி மாதிரி கட்டுக் குலையாத தேகம். அவளது இப்போதைய அலங்கோலத்தை அகற்றிவிட்டுப் பார்த்தால் லெட்சணமான பெண். கண்களுக்குக் கீழே கறுத்து நாலைந்து நாட்கள் நித்திரை விழித்தவள் போல் சோர்ந்திருந்தாள்.

"அம்மாச்சி இஞ்சர் நண்டுக்குஞ்சு"... தாயருகில் வந்தான் பிள்ளை. அதைப் பிடிப்பதற்கு ஆற்றங்கரையோரத்தில் கடுமையாக உழைத்திருக்கிறான் அவன். அந்தப் பெருமிதம் முகத்தில் ததும்ப, அவன் குடிசைக்குள் ஓடிப் போனான். அவள் சப்தம் காட்டாது வேப்ப மரத்தில் மொத்தமான கிளையாக முறித்தாள். கொப்புகளை உடைத்து இலைகளை உருவி எறிந்து பிரம்பாக்கிக் கொண்டு தயாராக நின்றாள்.

அடி விழப் போகிறது!

ஒரு கையில் நண்டுக் குஞ்சு, மற்றக் கையில் சுட்ட மரவள்ளிக் கிழங்கு, வாயில் ஒரு கடியாக வெளியே வந்தான் பையன். பத்ரகாளி திடீரெனப் பாய்ந்தாள். "உனக்கு நான் நான் எத்தினை தரம் சொன்னனான் ஆத்துப்பக்கம் போகாதை போகாதையென்டு. கொள்ளேலை போவான்கள் வந்து அள்ளிக் கொண்டு போனா என்னடா செய்வாய்?”

அவனது கால்சட்டையை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு கண்மண் தெரியாமல் அடித்த அடியில் வேப்பம் பிரம்பு நார் நாராய்ப் போயிற்று. அரைவாசி கடித்த மரவள்ளிக் கிழங்கு பற்றைக்குள் விழ அந்த ரகளையைப் பயன்படுத்திக் கொண்டு நண்டு தப்பிப் பிழைத்து எங்கேயோ பதுங்கிற்று.

"இனிப் போவியா இனிப் போவியா."

பத்ரகாளியின் பிடி தளரவில்லை. அவனால் தப்பி ஓட முடியவில்லை.

"போக மாட்டனம்மா போக மாட்டனம்மா, அடிக்காதையம்மாச்சி."

அடி விழ விழ, அவன் கால்களை மாறி மாறித் தூக்கினான். அவளுக்கு இன்னும் மனம் ஆறவில்லை. அவனை இழுத்துக் கொண்டே வேப்பமரத்தடிக்குப் போனாள். இன்னொரு கிளை முறிக்க கைகளைத் தூக்கிய வேளை பார்த்து விழுந்தடித்துக் கொண்டு பையன் காணாமல் போனான்.

அம்மாச்சி
"டேய் ஓடாதை ஓடாதை வந்திரு”... என்று கிளையை முறித்துக் கொண்டே கத்தினாள். தப்பி விட்ட போதும் பற்றைக்குள் விழுந்த மரவள்ளிக் கிழங்கை மறக்காமல் எடுத்துக் கொண்டு ஓடினான் அவன். அம்மாவால் இனிப் பிடிக்க முடியாதென்ற துணிவு வந்ததும் நின்றான். கால்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்து வலித்த இடங்களில் தடவினான். வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டே மரவள்ளிக் கிழங்கில் ஒரு கடி கடித்தான். கண்கள் தீவிரமாக பற்றைப் பக்கமாய் தேடின.

நண்டுக் குஞ்சு எங்கே?

என்ன நினைத்தாளோ முறித்த பிரம்பை எறிந்து விட்டு சேலைத்தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குள் போனாள் தாய்.

எல்லாவற்றையும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த தங்கவேலுவிற்கு திகைப்புத் தீரவில்லை. நாகரிகம் முழுதாக எட்டிப் பார்த்திராத இது போன்ற இடங்களில் இதெல்லாம் நாளாந்த சகஜமோ என்ற எண்ணம் வந்ததைத் தடுக்க முடியவில்லை.

இப்படியா பெத்த பிள்ளையைப் போட்டுக் கொல்லுறது. ஆற்றுப் பக்கம் போனதற்கா இந்த அடி, கடிச்ச கிழங்கை விழுங்கவும் விடாமல், அவனால் நம்பமுடியவில்லை. ஒருவேளை புருசனில் உள்ள கோபத்தை பிள்ளையில் தீர்க்கிறாளோ. காரணம் தெரியாமல் நேரம் நகர்ந்து. அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. நெற்றியைச் சுட்ட வெய்யிலும் இருக்க விடவில்லை. எழுந்து நடந்தான்.

சற்றுக் கீழிறங்கினால் ஆற்றங்கரையோரம் ஈரத்தில் நடக்கலாம். தலைகாட்டி மறையும் நண்டுக் குஞ்சுகளை ரசிக்கலாம். புளிய மரத்தடியில் தொங்கிப் பாய்ந்து புளியங்காய் பறிக்கலாம். அவன் கீழிறங்கினான்.

அன்னை தன் செல்லக் குழந்தையை மாறி மாறி முத்தமிடுவது போல மெல்லிய அலைகள் வந்து அவனது கால்களைத் தழுவிச் சென்றன. மனம் மட்டும் பையனைச் சுற்றிச் சுற்றி வந்தது.

இவள் முத்தம் கொடுக்க வேண்டாம். அணைத்து மகிழ வேண்டாம். அடிக்காமலிருந்தால் போதும். அடி தாங்காமல் ஒரு நாளைக்கு கண் காணாது ஓடப் போகிறான். அதன் பிறகு யாரை அடிக்கப் போகிறாள்?

அவனால் ஆற்றங்கரையின் ஈரத்தை, சலசலக்கும் நீரோட்டத்தை, நீரிலே பகலவன் மெல்ல மெல்ல விரித்துவிட்ட வெள்ளிப் போர்வையின் ஜொலிப்பை ரசிக்க முடியவில்லை. கண்ணீர் சிந்திய அந்தப் பிள்ளைதான் நெற்றியிலடித்தது போல முன்னுக்கு வந்து நின்றான்.

அவன் திரும்பி மேலே நடக்கையில் கடை வாங்கில் பிள்ளை இருப்பது தெரிந்தது. அனுதாபம் உந்தித் தள்ள,வந்து பக்கத்தில் நெருங்கி இருந்தான். முன்பின் தெரியாத ஆள், பையன் சற்று அரக்கி வாங்கின் மூலைக்கு வந்தான்.

"பக்கத்தில வா தம்பி."

பிள்ளையின் மூக்கால் ஓடியது. அவனுக்கு அருவருக்கத் தோன்றவில்லை. நெளிந்த அலுமினியக் கோப்பையில் புட்டும் ஆற்றுமீன் குழம்பும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அம்மாவிடம் அடி வாங்கியதையே மறந்து போயிருக்க வேண்டும்.

மேலெல்லாம் வரிவரியாய் வீங்கியிருந்தது. அதற்கு எண்ணை போட்டுத் தேய்த்திருந்தது. முற்றி வெடித்த மாதுளம் பழமாக முதுகில் இரத்தம் கண்டிப் போயிருந்தது. கன்னத்தில் புழுதியோடு கலந்து காய்ந்து விட்ட கண்ணீர் வரிகள்.

தங்கவேலு காற்சட்டைப் பையில் கை நுழைத்துத் துழாவினான். பிரயாணத்தில் மிஞ்சிய சில்லறை பத்து ரூபாய்க்கும் குறையாமலிருக்க அப்படியே பொத்தி பையனிடம் நீட்டினான். பிள்ளை மூக்கை இழுத்துக் கொண்டு வேண்டாம் என்று தலையசைத்தது. மீன் சதையை முள்ளிலிருந்து பிரித்து புட்டோடு குழைப்பதில் கவனமாயிருந்தது. காசை வேண்டாமென்றது ஏமாற்றந்தான். ஏழையென்றாலும் யாரிடமும் கைநீட்டாமல், யாசகம் செய்யாமல் ரோசமாய் வளர்த்திருக்கிறான் தகப்பன்.

சில்லறையை வாங்கில் வைத்துவிட்டு சாப்பிட்டு முடிக்கட்டும் எனக் காத்திருந்தான்.

"ராசா."

உள்ளிருந்து குரல் வர, பிள்ளை தட்டோடு எழுந்து போனான். போன கையோடு திரும்பி வந்தான்.தட்டில் புதிதாக புட்டும் பெரிதாக இரண்டு மீன் துண்டுகளும் இருந்தன. ஆவி பறக்க மீன்குழம்பு மணந்தது. சூட்டோடு அள்ளியள்ளி விழுங்கினான். பற்றைப் பக்கமும் இடையிடையே பார்த்தான்.

கை தவறிய நண்டுக்குஞ்சு என்னவாயிற்று?

சாப்பிட்டு முடிந்ததும் வெறும் கோப்பையை உள்ளே கொண்டு போனவன், சிறிது நேரம் கழித்து கையில் சோளம் பொத்தியோடு வந்தான். முகம் துடைத்து தலை சீவியிருந்தது. அப்போதுதான் மினுக்கிய செம்பு போல பளிச்சென்று இருந்தான்.

"தம்பி உன்ர பெயர் ராசாவா? "

“இல்லை.”

"அம்மா கூப்பிட்டாவே."

"அப்பிடித்தான் கூப்பிர்றவ."

"நேத்து என்ன சாப்பிட்டனி?”

"சாப்பிடேல்லை."

"சாப்பிடேல்லையா ஏன்? ”

"மூண்டுநாளா அம்மா சமைக்கேல்லை.”

“ஏன் சமைக்கேல்லை?"

காலில் ஊர்ந்த கட்டெறும்பை தட்டி விட்டுக் கொண்டிருந்தான்.

"ஆத்தோரம் போனா வெள்ளம் இழுத்திருமல்லா. ஏன் வீணாப் போய் அம்மாட்டை அடி வாங்கிறாய்?"

"வெள்ளம் இழுக்காது. தண்ணி வத்து நேரத்தில அப்புச்சியோட நானும் மீன் பிடிக்கிறனான்."

"அப்ப அம்மா ஏன் அடிச்சவ?”

பிள்ளை சோளம் பொத்தியில் அழுத்திக் கடித்துக் கொண்டிருந்தது.

"இப்பிடித்தானா ஒவ்வொரு நாளும் அடிக்கிறவ?”

அடுத்த கடியும் தொடர்ந்தது.

"உங்கட அப்புச்சி எங்க? ”

"தெரியா."

"என்ன தெரியா?"

“அப்புச்சி எங்கையென்டு தெரியா" என்றவன் சோளம் தண்டிலிருந்து உப்பை உறிஞ்சினான்.

"அப்புச்சி எங்க வேலைக்கா போயிற்றார்?"

"இல்லை.”

"அப்ப?”

"அப்புச்சியைக் கூட்டிக் கொண்டு போயிற்றாங்கள்."

"ஆர்?”

துடையில் இலையான் மொய்க்க பொத்தியால் விசுக்கினான்.

"ஆர் கொண்டு போனவங்கள்?”

"ஆமிக்காரங்கள். ஆத்துக்கு அந்தப் பக்கம் அப்புச்சியைக் கட்டியிழுத்துக் கொண்டு போய் வெய்யிலில வைச்சு துவக்குப் பிடியால அடிச்சிற்று கொண்டு போனவங்கள்.”

“ஏன்?”

"போன கிழமை ராத்திரி ஒரு அண்ணன் பசி என்டு வந்தவர். அப்புச்சி சோறு போட்டுக் குடுத்தவர்."

"ஆர் அண்ணன்?"

"எனக்குத் தெரியா."

"அப்புச்சியை எப்ப கொண்டு போனவங்கள்?

பிள்ளை விரலை மடக்கிற்று. “ஒன்டு ரென்டு, மூன்டு…..நாலு நாள்."

கடவுளே அவன் திரும்பி வருவானா? சாத்தியக்கூறுகள் இல்லையெனப் புரிந்த போது தங்கவேலு திகைத்துப் போனான். அப்பெல்லாம் உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தார் என்பார்கள். இப்போது! பசியென்று வந்தவனுக்கு உணவளித்த மனித நேயமுள்ள ஏழைக்கா இந்தக் கதி!

அம்மாச்சி
நான்கு நாட்களாய் தகப்பனுக்கு என்ன நடந்தது என்று கூடச் சரியாகத் தெரியாமல் சோளம் பொத்தியை உறிஞ்சிக் கொண்டிருக்கும் அந்தப் பிள்ளையைப் பார்க்கையில் தங்கவேலுவின் இதயத்தை பொத்தி இறுக்கியது போல என்னவோ செய்தது.

அந்த நேரத்தில் பஸ் வந்திருக்கவே வேண்டாம். உடைந்து கொட்டுப் படுவது போல சத்தமிட்டு வந்த பஸ் உறுமித் திரும்பி உடனேயே புறப்படத் தயாரானது.

"தம்பி ஆத்துப் பக்கம் போகாதை என்ன அம்மாட சொல்லைக் கேள்.என்ன.”

பிள்ளையின் நாடியைத் தடவிக் கொஞ்சிவிட்டு தங்கவேலு பஸ் ஏறினான். பஸ்ஸில் அவனும் இன்னும் இரண்டு பேரும் மட்டுந்தான். பஸ் நகர்ந்து வேகமாகத் தொடங்கியதும் அவசரமாக வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தான்.

காணாமல் போன நண்டை பிள்ளை பற்றைக்குள் தேடிக் கொண்டிருந்தான்.

வாங்கில் வைத்த சில்லறைக்காசு அப்படியே இருந்தது.

2 Comments

Previous Post Next Post