மணமகள் தேவை: உயர் வேளாளர் குலம். ஊர் யாழ்ப்பாணம். வர்த்தகப் பட்டதாரி. வயது 35. உயரம் 5அடி 2அங்குலம். கறுப்பு - சுமாரான தோற்றம். கனடா வன்கூவரில் 9 வருடங்களாக கணக்காளன். மாத ஊதியம் 2500 டொலர்ஸ். வன்செயலில் பெற்றோரை இழந்தவன். தனி வாழ்க்கை. சிகரட் பழக்கமுண்டு. சாஸ்திரக் குறிப்பிலும் சீதனத்திலும் அக்கறையில்லை. பொருத்தமான மணமகளை எதிர்பார்க்கிறான். ஈமெயில் விலாசத்தோடு தொடர்பு கொண்டு ஒளிவு மறைவின்றி விசாரிக்கலாம். விபரங்கள் கண்ணியமாகக் கையாளப்படும்.
இன்டர்நெற்றில் விளம்பரப்படுத்துவதற்கு எழுதியதை வாய்விட்டு வாசித்துப் பார்த்தான் நற்குணம். சிறிது மதுப்பழக்கமும் உண்டு எனக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் நேர்மையாக இருக்கும். ஆனால் பெருங்குடிமகன் எனத் தவறாகக் கொள்ளவும் வாய்ப்புண்டு. மற்றும்படி நாலு வரியில் மறைவு மழுப்பலில்லாமல் தன்னைப் பற்றிய நியாயமானதொரு தோற்றத்தைக் கொடுத்திருக்கிற திருப்தி வந்தது.
கணனியை, லொக்ஓன் செய்து ஓடவிட்ட பின் கண்ணாடி ஜன்னல் திரையை இழுத்து வெளியே பார்த்தான். பனிச்சரங்கள் வானத்திலிருந்து உதிர்ந்தவண்ணமேயிருந்தன. தெருவோர நிழல் மரங்கள் பச்சையிழந்து நரைத்துப் போய் தோன்றின. வன்கூவரில்(Vancouver City in Canada) பனியுதிர் காலமென்றால் எங்கும் பனி எதிலும் குளிர்தான்.
பனி பற்றிப் பிடிக்கும் வின்ரரை வந்த புதிதில் வாய் பிளந்து புல்லரித்திருக்கிறான். பற்கள் கிடுகிடுக்க கம்பளிகளுக்குள் காலம் தள்ளுகிற உபத்திரவம் போகப் போகத்தான் புரிந்தது. காலையில் வாசலை அடைத்திருக்கும் பனிக்குவியல்களை வெட்டி அள்ளி ஓரமாக ஒதுக்கி விட்டு வெளியே போவதற்குள் போதுமென்றாகி விடும். போன வெள்ளிக்கிழமை குளித்ததாக ஞாபகம். சுடுநீரில் டவலை நனைத்துப் புழிந்து முகத்தை ஒற்றி எடுப்பதோடு சரி.
நின்றபடியே இன்டர்நெற் ஐகனை கிளிக் செய்தான். பாஸ்வேர்ட் பரிசீலனை முடிய இன்டர்நெற் பக்கம் தரிசனம் தந்தது. வெப்சைட் விலாசத்தை டைப் பண்ணினான். அது ரொறன்ரோவில் இயங்கும் இன்டர்நெற் திருமணசேவை. ஈமெயில் விலாசத்தைக் குறித்துக் கொண்டான். உயர் வேளாளர் குலம்... எனத் தொடங்கி முழுதையும் டைப் பண்ணி இணைத்து விட்டு கிளிக் செய்ய, விளம்பரம் உரிய இடத்திற்குப் போய்ச் சேரும் அம்புக் குறி அசையத் தொடங்கிற்று.
பந்தபாசம் வேண்டாமென விறைப்பாயிருந்த மனம் கொஞ்ச நாட்களாக வெய்யில் பட்ட பனிக்கட்டியாய் இளகிப் போயிருக்கிறது. அம்மா அப்பாவை கண் எதிரே பதைக்கப் பதைக்க பலி கொடுத்துவிட்டு சொற்பத்தில் உயிர் தப்பி கனடாவிற்குப் புலம் பெயர்ந்த பின் இப்போதுதான் துணையின் தேவை அதிகமாக ஆக்கினை செய்கிறது.
எவ்வளவுக்கென்றுதான் விசரன் போல தனக்குள்ளேயே மாறி மாறிக் கதைத்துக் கொண்டிருக்க முடியும். காமம் கவ்வுகிற போது எத்தனைக்கென்றுதான் தலயணையைத் தஞ்சமாகக் கட்டிப் பிடிக்க முடியும். எல்லாம் ஒரு கையால் செய்து செய்து அலுத்துப் போய் விட்டது.
அடுத்த நாளும் பனிமூட்டத்தின் சிறையிலிருந்தான் பகலவன். முக்கு முடுக்கெல்லாம் குளிர் கட்டிப் பிடித்தது. வாய் திறந்தால் புகை பாயும் வலிய கூதல். எங்கு பார்த்தாலும் முகமூடிக் கம்பளி மனிதர்கள். மாலை வீடு வந்ததும் முதல் வேலையாய் இன்டர்நெற்றில் தேடினான். விளம்பரம் வந்திருந்தது. கட்டிலில் விழுந்து கற்பனையில் மிதந்தான்.
ஒரு வாரத்துள் ஐந்தாறு பெண்கள் ஈமெயிலுக்குள் வந்து நான் நீயென்று அணையக்கூடும். தோதான பெண்ணொருத்தி தொலைபேசியில் வந்து ஹலோ டியர் என்று தொடுப்பாகக் கூடும். ஏழையென்றாலும் பரவாயில்லை. பண்பாயிருந்தால் போதும். முகட்டு சீலிங் திரையில் ஒரு பெண்ணின் அசைவு தெரிந்தது. காதுவரை மூடி சுவெற்றர் போட்டிருந்தாள். முகம் தெரியவில்லை. அவனுக்குச் சிரிப்பு வந்தது. கற்பனைப் பெண் கூட கம்பளி போட்டுத்தானா வரவேண்டும்!
அவளிடம் அவன் தன்னையே இழந்து உருகிப் போக வேண்டும். அவள் சிரிக்க அவன் சிரித்து, அவள் அழ அவன் அழுது அந்த அன்பில் கரைய வேண்டும். சீலிங் பெண் சடுதியில் மறைந்து போக அவன் மகிழ்ந்து சிரித்தான். கன்னி வயலில் கெம்பி எழுந்த பயிராய் சிலிர்த்தான்.
இரவு நித்திரைக்குப் போகுமுன் ஈமெயிலை கிளிக் செய்ய இன்பொக்சில் வரவு ஒன்று வந்தேனே பாடியது:
மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப் பெண். பெயர் பாரதி. பீஏ இலக்கியம். வயது 30. உயரம் 5 அடி. மாநிறம். டொறன்ரோ ஐபீஎம் கொம்பனியில் கொம்யூட்டர் புறோகிறாமர். ஊதியம் 2000 டொலர்ஸ். வயதான பெற்றோரும் படிக்கும் தம்பியும். மீண்டும் தொடர்பு கொண்டால் வேண்டிய விபரங்கள் தருவேன் - பாரதி.
அன்பென்று கொட்டு முரசே மக்கள்
அத்தனை பேரும் நிகராம்
நின்று கொண்டே வாசித்தவன் யோசித்தான். இது போல இன்னும் பலர் எழுதலாம். பொறுத்திருந்தால் சுண்டிப் பார்த்துப் பொறுக்கி எடுக்கலாம். பல மரம் பார்த்த தச்சன் ஒரு மரத்தையும் வெட்டான் என்ற கதையாகவும் ஆகலாம். முதலில் வந்ததை முழு மனதோடு முயல்வதே நல்லது. பதில் அனுப்ப உடனேயே ஆயத்தமானான்.
பாரதியாரின் முரசொலியோடு நல்ல சகுணம் காட்டியிருக்கிறீர்கள். என்னைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். கிட்டத்தட்ட நான் ஒரு அநாதை. அலுவலகம் வீடு என்று தனித்து வாழ்ந்து விட்டேன். எனக்கேற்பட்ட இழப்பும் எம் மக்கள் படும் இன்னலும் என்னை ஓரளவுக்கு புடம் போட்டுள்ளன. காலத்திற்கு ஒத்த கெடுபிடிகளற்ற ஒரு புதிய தமிழ்ச் சமுதாயம் பரிணமிக்க வேண்டுமென்பது நேரத்தின் நிர்ப்பந்தம். கனடாவிலுள்ளது போல் ஆணும் பெண்ணும் நேரில் அறிமுகமாகி பரஸ்பரம் புரிந்து கொண்டு வாழ்க்கையில் இணைவது நல்லதென்பது என் எண்ணம். ஆட்சேபணை இல்லையெனில் உங்கள் புகைப்படத்தை ஈமெயில் செய்வீர்களா? அது என்ன பாரதி? ஆணின் பெயர்!
செய்தி போன பின்னர் சூடான காப்பி தொண்டைக்குள் இறங்கிய உற்சாகம். அடுத்த நாள் வேலையால் வந்ததும் கணனிக்குள் புகுந்தான். இருக்குமோ இருக்காதோ என்ற படபடப்பில் அந்தக் குளிருக்குள்ளும் வெப்பம் அப்பிப் பிடித்தது. பென்ரியம் III (Pentium III) கொம்யூட்டரின் வேகம் கூட அவனுக்குப் போதவில்லை. ஈமெயில் செய்தியோடு ஃபைல் ஒன்று இணைத்திருக்கும் கிளிப்பும் தெரிய அவசரமாக அதனைத் தட்டினான். ஸ்கான் செய்த பாரதியின் படம்.
ஆர்ப்பாட்டமில்லாத பண்பு பளிச்சிடும் முகம். படத்திற்கென்று தருவிக்கப்படாத இயற்கை அவனை அள்ளிக் கொள்ள ஈமெயிலை வாசித்தான்.
என்னில் ஈடுபாடு கொண்டதற்கு நன்றி. சுப்ரமணிய பாரதியாரின் அபிமானத்தால் தந்தை மகளுக்கு வைத்த பெயர் பாரதி. உங்கள் படத்தை நான் இப்போதைக்குக் கேட்க மாட்டேன். உங்கள் ஒளிவு மறைவற்ற தன்மையை பெரிதும் மதிக்கிறேன். இன்னலுறும் நம் தமிழ் மக்கள் புடமிடப்பட்டு புதிய சமுதாயத்தை பரிணமிக்கிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உங்களிடம் தெளிவு தெரிகிறது - ஒன்றைத் தவிர! உங்கள் முடிவு தெரிந்ததும் என் பெற்றோருக்குச் சொல்வேன். - பாரதி.
பாதணிகளைக் கழட்டாமலே பதில் அடிக்கத் தொடங்கினான் நற்குணம்.
அன்புள்ள பாரதிக்கு - என் படத்தை இணைத்திருக்கிறேன். அது என்ன ஒன்றைத் தவிர! சிகரட் பழக்கத்தை குறிப்பிடுகிறீர்களா? விரைவில் விட்டுவிடுவேன். இன்னும் எத்தனையோ என்னில் இருக்கலாம். தவறெனத் தெரியாமலே இரத்தத்தில் ஊறிப் போயிருக்கலாம். போகப் போக கண்டுபிடித்துச் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன். கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு. அதற்கு இந்தக் குளிரை மட்டும் குறை சொல்வது சரியெனத் தோன்றவில்லை. நிற்க, உங்கள் விபரங்களில் ஒரு விடயம் இன்னும் தெளிவாகவில்லை. நேரடியாகக் கேட்கத் தயக்கம். கேட்காமலிருக்கவும் முடியவில்லை. புரிந்து கொண்டு எழுதுவீர்களா? - நற்குணம்."
அன்புள்ள பாரதிக்கு - என் படத்தை இணைத்திருக்கிறேன். அது என்ன ஒன்றைத் தவிர! சிகரட் பழக்கத்தை குறிப்பிடுகிறீர்களா? விரைவில் விட்டுவிடுவேன். இன்னும் எத்தனையோ என்னில் இருக்கலாம். தவறெனத் தெரியாமலே இரத்தத்தில் ஊறிப் போயிருக்கலாம். போகப் போக கண்டுபிடித்துச் சொல்லுங்கள். திருத்திக் கொள்கிறேன். கொஞ்சம் குடிப்பழக்கம் உண்டு. அதற்கு இந்தக் குளிரை மட்டும் குறை சொல்வது சரியெனத் தோன்றவில்லை. நிற்க, உங்கள் விபரங்களில் ஒரு விடயம் இன்னும் தெளிவாகவில்லை. நேரடியாகக் கேட்கத் தயக்கம். கேட்காமலிருக்கவும் முடியவில்லை. புரிந்து கொண்டு எழுதுவீர்களா? - நற்குணம்."
சனிக்கிழமை விடுமுறை நாள் குறுகுறுவென்று இருந்தது. காலையிலேயே கணனியை தட்டி விட்டுக் காத்திருக்க சுகமாயிருந்தது. தான் குறிப்பிடாமல் விட்ட முக்கிய விபரம் என்னவென்று பாரதி கண்டுகொள்வாளா? குட்டி போட்ட பூனை கணனியை சுற்றிச் சுற்றி வந்தது.
மதியமாயிற்று. சூரியன் இல்லாத அழுமூஞ்சி வானத்தைப் பார்க்கவே விருப்பமில்லை. ஜன்னல் திரையைத் திறந்தால் வெள்ளை மழையைத் தவிர வேறென்ன தெரியப் போகிறது! கட்டிலில் விழுந்து கிடந்தான். நாலைந்து சிகரட் ஊதினான். கணனியைப் பார்த்தான். செய்தி வந்திருந்தது!
ஒன்றைத் தவிர எனக் குறிப்பிட்டது சிகரட்டை அல்ல. நான் குறிப்பிட்டதும், நான் குறிப்பிடவில்லை என்று நீங்கள் கேட்டதும் ஒரே விசயந்தான் என ஊகிக்கிறேன்.
"சாம்பல் நிறமொரு குட்டி கருஞ் சாந்து நிறமொரு குட்டி
"சாம்பல் நிறமொரு குட்டி கருஞ் சாந்து நிறமொரு குட்டி
பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி
எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ
இந்த நிறம் சிறிதென்றும் இஃதேற்றமென்றுஞ் சொல்லலாமோ?
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் அதில் மானுடர் வேற்றுமையில்லை!”
நான் என்ன சாதி என்றுதானே கேட்கிறீர்கள்?
நான் தமிழ்ச்சாதி.
-பாரதி.
நான் என்ன சாதி என்றுதானே கேட்கிறீர்கள்?
நான் தமிழ்ச்சாதி.
-பாரதி.
நெஞ்சு திக்கென்றிருந்தது. பஞ்சில் பட்ட நெருப்பாய் வெட்கம் திடீரெனப் பற்றிக் கொண்டது. கம்பளிச் சட்டைக்குள் வியர்த்துப் பிசுபிசுக்க ஜன்னல் திரையைத் திறந்து பார்த்தான். வெளியே புதினமாக வெளிச்சம்.
பனிமழையைக் காணவில்லை. பகலவன் பவனி வரத் தொடங்கியிருந்தார். மரங்களின் பனிப்போர்வை சொட்டுச் சொட்டாய் உருகி உரிந்து கொண்டிருக்க பச்சை இலைகள் சிறையிலிருந்து மீண்ட சந்தோசத்தில் சிலிர்த்தன.
உள்ளே வந்தான். ஆரம்பத்தில் எழுதிய மணமகள் தேவை விளம்பரத்தாள் அவனை விகற்பமாகப் பார்த்தது.
"உயர் வேளாளர் குலம்."
"உயர் வேளாளர் குலம்."
கிறுக்கி வெட்டிவிட்டு பாரதிக்குப் பதில் எழுத கீ போர்ட்டில் விருப்புடன் விரல் பதித்தான் நற்குணம்.
Tags:
Tamil WriteUps
Nice
ReplyDeleteYour writing inspires me, keep going 👍
ReplyDelete